Nation
109

“வசந்தம்” சொன்னபடி செய்தார் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்

மே 1 ஆம் தேதி முன் அறிவிப்பு இன்றி ‘ஓகே’ அலைவரிசைக்கு மாற்றப்பட்ட “வசந்தம்” நிகழ்ச்சி, மே 22 முதல் மீண்டும் மலேசிய வானொலி தொலைக்காட்சி அலைவரிசை 2இல் ஒளியேறவிருக்கிறது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் பலனாக இது சாத்தியமாகி உள்ளது.

கடந்த மே 1, தொழிலாளர் தினத்தன்று “வசந்தம்” நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த போதுதான் இந்த மாற்றம் குறித்து டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிந்தார் எனத் தெரிய வருகிறது. கடந்த 25 வருடங்களாக பல்வேறு வளர்ச்சி கண்டு வந்திருக்கும் வசந்தம் நிகழ்ச்சி, இப்படி கட்டண அலைவரிசைக்கு மாறியது குறித்து அதிருப்தி அடைந்த அமைச்சர், அத்தோடு நின்று விடாமல் இந்த மாற்றம் கூடாதெனக் களத்திலும் இறங்கினார்.

இந்நிலையில் மஇகா தேசியத் துணைத் தலைவருமான அமைச்சர் சரவணன், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் பேச இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ‘வசந்தம்’ ரசிகர்கள் காத்திருந்தனர்.

மனிதவள அமைச்சர் நேரடியாக தொடர்புப் பல்லூடகத் தகவல் அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா அவர்களைச் சந்தித்து, இதுகுறித்து பேசி மீண்டும் வசந்தம் ஒளிபரப்பாக ஏற்பாடு செய்தார். இவ்வேளையில் இருவருக்குமே மலேசிய இந்தியர்களின் நன்றி உரித்தாகுக.

RTM அலைவரிசை 2 இல் ஒளிபரப்பாகி வந்த தரமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘வசந்தம்’. ஏராளமான நேயர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி, பல்வேறு பயனுள்ள தகவல்களை அளித்து வந்தது. மலேசிய இந்தியர்களின் சாதனைகளையும் எடுத்துச் சொன்ன நிகழ்ச்சி இது. RTM 2 இல் இலவசமாகப் பார்த்து வந்த நிகழ்ச்சி, திடீரென கட்டண அலைவரிசைக்கு மாற்றப்பட்டதால் ‘வசந்தம்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால் ஒரு மாதம் கூட அந்த வருத்தம் நீடிக்கவில்லை. மூன்றே வாரங்களில், மே 22ஆம் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல் வசந்தத்தை மலேசிய வானொலி அலைவரிசை 2இல் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

மக்கள் மனம் புரிந்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், உடனடியாக எடுத்த நடவடிக்கைகளால் இந்த மாற்றம் என்பதில் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிப்பதோடு, உடனடியாக செயலில் இறங்கும் செயல் வீரர் அமைச்சர் சரவணன் என்றால் அது மிகையாகாது. வசந்தம் ரசிகர்கள் சார்பில் அமைச்சருக்கு நன்றி.

More Similar Posts

Most Viewed Posts
Menu